Friday, 11 January 2013

சக்சஸ் சாம்ராட்




சக்ஸ் சாம்ராட்
நம்மில் பலர் பல தொழில்களைச் செய்து வருகின்றனர். குறிப்பாக ஒரே தொழிலை நம்மில் பலர் செய்து வருகின்றனர். இன்னும் பலர் மினிமம் கியாரன்டி தருகின்ற மாதச் சம்பளதாரர்களாகவே இருந்து வாழ்க்கையை நடத்தினால் போதும் என்று நினைக்கின்றனர். ஒரு சிலரே மாதச் சம்பள வேலையை உதறிவிட்டு தொழில் தொடங்க ரிஸ்க் எடுக்கின்றனர்.  ஓவ்வொரு விஷயத்தில் வெற்றி பெற்றவர்களுக்குப் பின்னும் ஒரு வெற்றிக்கதை உண்டு. ஒரு மனிதர் வெற்றி பெற்ற பின் அவரை நம் நண்பராகவோ உறவினராகவோ காட்டிக் கொள்வது இயல்பு. நம் உறவினர் ஒருவரே ஒரு கிரானைட் சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறார். அவர்தான் திரு. ராஜவேல் அவர்கள். அனைவருக்கும்  ஆர்;;.ஆர்.
நாம், நமது இதழில் அவரைப் பற்றிய ஒரு கட்டுரை அல்லது நேர்காணல் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்ததுடன் அவருக்கே உரித்தான முக மலர்ச்சியுடன் நம்மை வரவேற்று தேநீர் உபசரிப்புடன் நேர்காணலுக்கு தயாரானார்.
நீங்கள் துவக்க காலத்தில் ஆசிரியராக இருந்ததாக அறிகிறோம். ஏன் ஆசிரியர் வேலையை உதறிவிட்டு தொழில் துறைக்கு வந்தீர்கள். தொழில் துறையில் நுழைய வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?
1970-71 முதல் 1983 ஆண்டு வரை சென்னையில் கணித ஆசிரியராக பணியாற்றியிருக்கிறேன். ஆனால் எனது உள்ளத்தில் தொழில் துறையில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. தொழில் துறையில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் எப்போது ஏற்பட்டது என்பது சரியாக தெரியவில்லை. பிறந்தது முதலே ரத்தத்தில் ஊறிய விஷயமாககூட இருக்கலாம்.
தாங்கள்தான் நமது ஊரின் முதல் பட்டதாரி. கல்வியைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலத்தில் அதாவது 60 களின் இறுதியில்   கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு தோன்றியது?
பள்ளி நாட்களிலிருந்தே நிறைய படிக்கவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்தது. விழிப்புணர்வு இல்லாத காலமானாலும் என் விருப்பத்திற்கு வீட்டில் தடை இல்லை. எனவே படிப்பை தொடர்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.
உங்கள் பள்ளி,  கல்லூரி காலத்தை பற்றி..
எனது பள்ளிக்காலம் மிக மகிழ்ச்சியாக இருந்தது. 3 ம் வகுப்பு வரை வெங்கட்டம்பட்டி ஆரம்ப பாடசாலையிலும் 4 மற்றும் 5 வகுப்புகள் நமது ஊரிலும் மகிழ்சியாக கழிந்தது. எங்கள் பள்ளி ஆசிரியரின் சைக்கிளிலேயே அமர்ந்து கொண்டு வெள்ளிக்கிழமை மாலை தர்மபுரியில் உள்ள எனது மாமா வீட்டுக்கு சென்றுவிடுவேன். சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் மாமா பசங்களுடன் விளையாட்டு, ஆட்டம், பாட்டம் என முடித்துவிட்டு திங்கள் காலை மீண்டும் ஆசியரியர் சைக்கிளில் பள்ளிக்கு பயணம் என மகிழ்ச்சியாக கழிந்தது.
பின்பு 6 முதல் 11 வரை தர்மபுரி அதியமான் பள்ளியில் படித்தேன். அப்போது வெங்கட கிருஷ்ணன் என்கிற NCC ஆசிரியர் இருந்தார். மிகவும் கண்டிப்பானவர். ஆனால் எனக்க மிகவும் பிடித்த ஆசிரியர்  . அப்போது நான்      NCC மாணவர் தலைவராக இருந்தேன். மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று  தங்கப் பதக்கம் வாங்கியது மறக்க முடியாத நினைவு.
பின்பு 1965 ல் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியிpல் PUC . 1965-68 சென்னை புதுக் கல்லூரியிpல் பி.எஸ்.சி கணிதம் முடித்தேன். பின்பு 1969-70 ல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். முடித்தேன். கல்லூரி காலங்களில் நான் பல்வேறு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். புதுக்கல்லுரியில் படித்த போது மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் அல்லாத மாணவர் தலைவன் நான்தான். பின்பு சென்னை தமிழ் பேரவையின் உதவி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த போது அங்கும் ஒட்டு மொத்த மாணவர்களின் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  இன்று தமிழக்தின் பல்வேறு அரசியல் கட்சிகளில் முக்கியமான பதவிகளில் உள்ளவர்கள் என் கல்லூரிக் கால நண்பர்கள்.
கல்லூரி முடித்த பின் நீங்கள் என்ன வேலைக்கு போக விரும்பினீர்கள்?.
நான் வழக்கறிஞராக விரும்பினேன். அந்த ஆசை எனது  பெற்றோரால் நிராகரிக்கப்பட்டது. பின்பு திரைப்படத்துறையில் ஒளிப்பதிவாளராக விரும்பினேன். அக்காலத்தில் பட்டம் படித்தவற்களுக்கு எதற்கு ஒளிப்பதிவாளர் தொழில் என்று திரு. பாலச்சந்தர் அவர்களால் நிராகரிக்கப்பட்டேன். பின்பு கல்லூரிக் காலத்தில் அரசியல் தலைவர்களுடன் எனக்கு பரிச்சயம் இருந்ததால் அரசியலில் நுழைய ஆசைப்பட்டதுண்டு. ஆனால் ஒரு சிறுபான்மைச் சமூகத்திலிருந்து ஒருவன் அரசியலில் சாதிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்ததால் அதிலிருந்து விடைபெற்று விட்டேன். பின்புதான் ஆசிரியப் பயிற்சி முடித்து ஆசிரியரானேன்.
ஆசிரியர் வேலையை உதறியவுடன் நீங்கள் ஆரம்பித்த தொழில் எது?
ஆசிரிய வேலையை விட்டு வந்தவுடன் நண்பர்களுடன் ஒரு சேகோ தொழிற்சாலை ஆரம்பிக்க நினைத்து பணிகளைத் துவக்கினோம். ஆரம்பக் கட்டத்திலேயே அது தோல்வியில் முடிந்தது.
கிரானைட் தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு எப்படி வந்தது?
ஆசிரியர் தொழிலை விட்டவுடன் அன்றைய நாளில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.பி. முனுசாமி அவர்களின் மகன் தனக்கோடி மற்றும் எனது ஒன்றுவிட்ட சகலையான திரு.முனிராஜ் ஆகியோர் ;  சேர்ந்து அரசுப்பணிகளுக்கான ஒப்பந்ததாரராக இருந்தோம். சிலபிரச்சினைகள் காரணமாக ஒப்பந்ததாரராக தொடர முடியவில்லை. நான் கல்லூரிக் காலத்தில் சென்னையில் தங்கியிருந்த போது அடிக்கடி என்னை சந்திக்க நமது ஊரைச் சேர்ந்த திரு.ராமி செட்டி வருவார். அவர்தான் அப்பொழுது கிரானைட் தொழிலில் சிறிய அளவில் ஈடுபட்டிருந்தார். அதன் மூலம் எனக்கும் அந்த ஆசை தொற்றிக் கொண்டது. பின்பு நான், திரு.ராமி செட்டி மற்றும் திரு.முனிராஜ் ஆகிய மூவரும் சேர்ந்து இந்த தொழிலைத் துவங்கினோம். பின்னர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக ராமி  செட்டி விலகிக் கொள்ள வேண்டியதானது. முனிராஜ் மற்றும்  ராஜவேல் இரண்டிலும் உள்ள ராஜ்கள் சேர்ந்துதான் ஆர்.ஆர். ஆனது.
பின்னர் ஆர்.ஆர். ஏஜன்சீஸ் என்ற பெயரில் காரிமங்கலத்தில் பெட்ரோல் வங்கி துவங்கினோம். துவக்கத்திpல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தோம். ஆனாலும் எனது உள்ளுணர்வு கூட்டாக தொழில் செய்வதை விரும்பவில்லை.


    ஏன் உங்கள் பார்ட்னர்ஷிப் பிரிந்தது?  அதில் நீங்கள் சந்தித்த பிரச்சனை என்ன?
என்ன காரணம் என்ற இன்று வரை தெளிவாக உணர முடியவில்லை. காலத்தின் கட்டாயம். 2 மாதங்களுக்குள் 2 கோடி ரூபாய் நான் செலுத்த வேண்டிய நிலை. கடுமையான நிதி நெருக்கடி. இவ்வளவு பணத்தை எப்படி திரட்டுவது என்கின்ற நிலையில் என் மனம் மட்டும் கண்டிப்பபாக அந்த பணத்தை திரட்ட முடியும் என்று நம்பியது. கடுமையான நிதிப் பிரச்சினையிலும் தனியாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருந்த எனக்கு இது மகிழ்ச்சியாகவே இருந்தது.
நீங்கள் தனியாக தொழிலைத் தொடர்ந்தவுடன் ஏற்பட்ட பிரச்சனைகள்
தொழிலைத் தனியாக தொடர ஆரம்பித்த காலம்தான் மிக நெருக்கடியான காலம். கடுமையான நிதி நெருக்கடி. இயந்திரங்களில் அடிக்கடி ஏற்பட்ட கோளாறால் உற்பத்தி நிறுத்தம் போன்றவை பெரும் பிரச்சனைகளாக இருந்தது. 1997 லிருந்து 2007 வரை 10 வருடங்கள் கடும் மன உறுதியுடன் போராடினோம்.
உங்கள் தொழிலுக்கு உங்கள்  குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு எந்த அளவு இருந்தது..
இந்த அளவிற்க்கு நான் வளர முடிந்ததிற்கு என் மனைவி ஒரு முக்கிய காரணம். என் கஷ்ட நஷ்டங்கள் அனைத்திலும் பங்கெடுத்தவர். பின் என் பார்ட்னராகவும் நண்பராகவும் உள்ள என் மகன். அவரின் வருகைக்கு பிறகு தொழில் நுட்ப ரீதியாக எங்கள் தொழில் வலுவடைந்தது. உதாரணமாக கல் வெட்டும் எந்திரம் ஒன்று சமீபத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம். இந்தியாவில் இந்த எந்திரத்தை இறக்குமதி செய்துள்ள ;இரண்டாவது நிறுவனம். தமிழகத்தில் முதல் நிறுவனம் என்பதில் எங்களுக்குப் பெருமை.
இவ்வளவு பெரிய நிறுவனத்தை நீங்கள் வெற்றிகரமாக நடத்த  நீங்கள் கடைபிடிக்கும் கொள்கை.
அனைவரையும் அன்பாக நடத்துங்கள். ஈகோவைத் தவிருங்கள். நிஜத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அனைவரிடமும்  உண்மையாக இருங்கள். நம்மிடம் வேலை செய்வர்களை சந்தோசமாக வைத்திருங்கள். நாம் மட்டும் கார் வாங்க வேண்டும் என்பதைவிட நம்மிடம் பணியாற்றும் ஊழியரும் காரில் வளர வெண்டும் என்றே ஆசைப்படுகிறோம்.  எங்கள் நிறுவனம் பெரிய நிறுவனமாக இருந்தாலும் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்திருக்கிருக்க வேண்டும் என்பது நான் கண்டிப்பாக கடைபிடிக்கும் கொள்கை.
    உங்களுடைய இன்ஸ்பிரேசன்....
திரு.ராஜதுரை நாடார். சென்னையில் மளிகை கடை நடத்தி வந்தவர். உங்களின் எல்லைக்கு தகுந்த அளவிற்கே உங்கள் வளர்ச்சி இருக்கும் என்று எனக்கு உணர்த்தியவர். ஆசிரியப் பணியில் மாத சம்பளம் ரூ.10000. என்றால் 40000 ரூபாய் சம்பாதிக்க  நினைத்தால் கூடுதல் நேரம் உழைக்கலாம். டியுசன் எடுக்கலாம். 1 லட்சம் சம்பாதிக்க நினைத்தால் அதற்கேற்ற தொழிலை தேர்ந்தெடுங்கள் என்று கூறியவர் அவரே.
    எந்த விஷயத்தை செய்ய முடியவில்லை என வருத்தப்படுகின்றீர்கள்.
ஒரு கல்வி நிறுவனத்தை ஆரம்பிக்க நினைத்தேன். தவிர்க்க முடியாத காரணங்களால் ஆரம்பிக்க முடியவில்லை. 1971 வனிதா டுட்டோரியல் கல்லூரி என்று சென்னையில் ஒரு டியுசன் சென்டர் ஆரம்பித்தோம். 250 மாணவர்கள் படித்தனர். 13 ஆசிரியர்கள் பகுதி நேரத்தில் பணி செய்தனர். அன்று வனிதா டுட்டோரியல் கல்லூரியில் என்னுடன் இருந்தவர்கள் ஆரம்பித்ததுதான் இன்று பெரிய அளவில் வளர்ந்து நிற்கும் ஜெயா கல்வி நிறுவனங்கள். பின்னர் சவிதா கல்விக் குழுமத்துனருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக  சிறுபான்மை மொழி கல்லூரி ஒன்று துவங்க வாய்ப்பிருந்தது. தொழிலில் ஆரம்ப கட்டத்தில் இருந்த நிதி நெருக்கடி அதை தடுத்துவிட்டது. நமது ஊரில் ஒரு கல்லூரியை ஆரம்பித்க நினைத்திருக்கிறேன். காலம் வாய்ப்பளிக்கும் என்று காத்திருக்கிறேன்.
  தங்கள் தொழிற்சாலையில் எத்தனை பேர் பணிபுரிகின்றனர்?
350 பேர் பணி புரிகின்றனர். அவர்களுக்கு அதிகபட்சம் 40000 முதல் குறைந்த பட்சம் 5000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
  உங்கள் நிறுவனத்தின் சிறப்பு என்ன ?
உலகத்திலேயே பாரடைசோ வகை கிரானைட் கற்களை தயாரிப்பது  எங்கள் நிறுவனம் மட்டுமே. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் எங்கள் நிறுவனம் முன்னணில் உள்ளது.
  உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?
தற்போது 350 பேர் பணிபுரிகின்றனர். எங்கள் நிறுவனத்தை 1000 பேருக்கு வேலை அளிக்கும் அளவுக்கு உயர்த்த வெண்டும். இந்தியாவில் உள்ள தலை சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும். டிவிஎஸ், அசோக் லேலண்ட் போல ப்ரண்டேட் நிறுவனமாக மாற்ற வேண்டும்.
  உங்களுக்கு ஓய்வு என்பது...
 ஓய்வு நேரங்களில் திரைப்படம் பார்ப்பது பிடிக்கும்.  நான் தொழில் ஆரம்பித்த காலத்தில் எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் உழைக்க வேண்டியிருந்தது. இன்று எங்கள் தொழிற்சாலையில் பணியாற்றும் 350 நபர்களின் குடும்பங்களுக்கும் சேர்த்து உழைக்க வேண்டியுள்ளது. மது குடிப்பவனால் அது இல்லாத போது கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விடும். அதே போல தொடர்ந்து வேலை செய்பவர்களால் சும்மா இருப்பது கடினம்.
  இவ்வளவு பணிச்சுமையிலும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் எப்படி நீங்கள் கலந்து கொள்கிறீர்கள்..
அனைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு சில நாட்களில் மிக அதிக    நிகழ்ச்சிகளில் கூட  கலந்து கொள்ள வேண்டியிருகிகிறது. நேரமின்ன்மை  காரணமாக அடுத்தடுத்த நாட்களில் கலந்து கொள்கிறேன். ஆனால் அவர்களுடன் நிறைய நேரம் செலவழிக்க முடியாததற்க்கு வருந்துகிறேன்.
  உங்கள் ஆசை
சாகும் வரை வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். வேலை செய்து கொண்டிருக்கும் போதே என் மரணம் நிகழ வேண்டும்..
  இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல ஆசைப்படும் நினைக்க விஷயம் என்ன?
நிறைய ஆசைப்படுங்கள். நடந்து சென்றால் சைக்கிள் வாங்க ஆசைப்படுங்கள். சைக்கிளில் சென்றால் பைக் வாங்க ஆசைப்படுங்கள். ஆனால் ஆசையை உண்மையாக்க நேர்மையாக உழையுங்கள். உங்கள் ஆசையை அதிகரிக்க அதிகரிக்க உழைப்பையும் அதிகமாக்குங்கள். ஒரு நிலையை அடைய நீங்கள் ஒரு மடங்கு உழைத்தால் அதைக் தக்க வைக்க இரு மடங்கு உழைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

                             நேர்காணல் - சீனி மற்றும் செந்தில்

No comments:

Post a Comment