Friday, 11 January 2013

விளையாட்டு விளையாட்டல்ல




என்ன விளையாடறீங்களா? சீரியசான விசயத்தை ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு ஏனோதானோ என்று பதில் சொன்னால் பயன்படுத்தப்படும் சொற்றொடர். அப்படியென்றால் விளையாட்டு சீரியசான விசயம் இல்லையா? ஏன் நம் குழந்தைகளை விளையாட நாம் அனுமதிப்பதில்லை. நம் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் அனுமதிப்பதில்லை. ஆனால் அதே பள்ளிகள் டோனியையும் சச்சினையும் தங்கள் பள்ளிகளுக்கு அழைத்து வந்து பள்ளி ஆண்டு விழாவில் பேச வைக்கிறார்கள். அப்படியென்றால் விளையாட்டு மாணவர்களுக்கு தேவையில்லாததா? தேவையானதா?அதனால் பயன் ஏதும் உண்டா? குழந்தைகளை படி படி என்று நச்சரிக்கும் நாம் எப்போதாவது படித்தது போதும் என்று விளையாடச் சொல்லியிருக்கிறோமா? ஏன்.?
அதனால் பயன் இல்லை. அல்லது பயன் நமக்கு தெரிவதில்லை. ஆனால் ஏன் நாம் சச்சின் நன்றாக விளையாவில்லை என்று விமர்சிக்கிறோம். சானியா மிர்சா கிரான்ட்ஸ்லாம் வாங்க ஆசைப் படுகிறோம். விளையாடச் சென்றால் படிப்பு கெட்டுவிடும். சரி என்ன விளையாடுகிறோம். அந்த விளையாட்டை தேர்ந்தெடுத்தால் எதிர்காலம் உண்டா? ஒரு தேசிய அணியில் இடம் பிடிப்பதற்கு ஜோனல், டிஸ்ட்ரிக்ட், டிவிசனல், ஸ்டேட் என எத்தனை விசயங்களை கடக்க வேண்டும் என்று நமக்கு தெரியுமா. நமது பிள்ளை அரசு வேளைக்கு போகவேண்டும், மென்பொறியாளராக வேண்டும் என்று ஆசைப்படும் நம்மில் யாராவது நமது பிள்ளை விளையாட்டு வீரராக வரவேண்டும் என்று விரும்புகிறோமா?
35 வருடங்களுக்கு முன் ஒரு ஊரில் டென்னிஸ்போட்டி நடந்துகொண்டிருந்தது. அந்த போட்டியைக் காண ஒரு பெண் அமர்ந்திருந்தாள். விளையாடிக்கொண்டிருந்தது மார்டினா நவரத்திலோவா என்ற டென்னிஸ் வீராங்கனை. டென்னிசை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு மார்டினாவின் ஆட்டம் மிகவும் பிடித்துவிட்டது. உடனே அந்தப் பெண்ணுக்கு தன் பெண் குழந்தையையும் மார்டினா நவரத்திலோவாவைப் போல டென்னிஸ் ஆட்டக்காரராக ஆக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் அந்த 18 வயது பெண்ணுக்கு திருமணமே ஆகவில்லை. பின்னர் திருமணம் ஆனது. ஆசைப்படியே பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மார்டினா நவரத்திலோவா நினைவாக மார்டினா ஹிங்கிஸ் என்று பெயர் வைக்கிறார். அந்த குழந்தைதான்  1994ம் ஆண்டு முதல் 2002 வரை உச்சத்தில் இருந்த போது தொடர்ந்து 209 வாரங்கள் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்து பல்வேறு கிரான்ஸ்லாம் பட்டங்களைக்குவித்த சுவிட்சர்லாந்து வீராங்களை மார்டினா ஹிங்கிஸ். இன்று டென்னிஸில் மார்டினா நவரத்திலோவாவை தெரியாதவர்களுக்கு கூட மார்டினா ஹிங்கிசைத் தெரிகிறது.
கேரம் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது இளவழகி. படிப்பில் 10 வகுப்பு கூட தாண்டாத பெண். ஆனால் கேரம்மில் உலக சாம்பியன். அந்த இளவழகியை நாம் நேரில் கூட பார்த்தது கிடையாது. அதே கேரம்மில் இளவழகியின் சாதனையை முறியடிக்க இருக்கும் கீர்த்தனாவை  நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இளவழகிக்கும் கீர்ததனாவுக்கும் இரண்டு படிதான் இடைவெளி. இளவழகி இந்தியாவிற்கு விளையாடி உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். கீர்த்தனா மாநில அளவில் விளையாடி வெற்றி வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார். ஸடேட், நேஷனல் என இரண்டு படிகளைத் தாண்டினால் இளவழகியின் இடத்தை நமது கீர்த்தனா பிடித்து விடலாம். நமது ஊரில் ஸ்டேட் லெவலில் விளையாடிய நான்கு விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா? அவர்களின் பெற்றோர்களுக்கே கூட தெரியுமா என்று தெரியாது?
# திருமதி ரம்யா, பெ /பெ திரு.புருசோத்தமன், திருமதி.மஞ்சுளா. தேசிய  அளவிளான வளைபந்தாட்டக்காரர் (டென்னிகாய்ட்) வருடம்: 2010.

# செல்வி.கீர்த்தனா பெ /பெ திரு.சிவக்குமார்,  திருமதி.சத்யா. 8 ம் வகுப்பு,  செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,  தர்மபுரி. மாநில அளவிளான கேரம் ஆட்டக்காரர்.ஆண்டு: 2009
# திரு.ராஜா பெ /பெ திரு.தனஞ்செயன், திருமதி.நாகரத்னா. மாநில அளவிளான கோ கோ ஆட்டக்காரர், ஆண்டு 2004-05.
# செல்வி வித்யா, பெ /பெ ஆனந்தன், திருமதி. சின்னபாப்பா, மாநில அளவிளான கோ கோ ஆட்டக்காரர், ஆண்டு: 2004-05.
ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வாங்கவில்லை என்றால் கிண்டல் செய்கிறோம். சச்சின் செஞ்சுரி அடிக்கவில்லை என்றால் நாம் கோபித்துக் கொள்கிறோம். ஆனால் நம்பிள்ளை சச்சின் ஆவதை யாரும் விரும்புவதில்லை. இது நமக்கு மட்டுமல்ல. மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு இருக்கிற பிரச்சனை. விளையாட்டுப் பக்கம் சென்றால் படிப்பு கெட்டுவிடுமோ  எதிர்காலம் பாழாய்விடுமோ என்ற பயம். ஒன்று மட்டும் நினைத்துக்கொள்ளுங்கள், படிப்பு என்பது சமூகத்தில் நம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. அவ்வளவுதான். இன்றைய மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களுக்கு சமூகத்தில் பிரச்சனைகளை சமாளிக்க கற்றுக்கொடுத்தால் போதும். மிச்சத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். தேசிய  அளவில் விளையாடிய நமது ரம்யாதான் 12ம் வகுப்பில் 3 பாடங்களிலும் நூற்றிற்கு நூறு (சென்டம்) வாங்கினார். படிப்பால் விளையாட்டு கெட்டுவிட்டதா? விளையாட்டால் படிப்புதான் கெட்டுவிட்டதா?
சச்சின் டெண்டுல்கர்கூட கிரிக்கெட் விளையாட்டை தேர்ந்தெடுக்கவில்லை. பள்ளி விடுமுறையில் குறும்பு செய்து கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்டார். அடுத்த விடுமுறை வந்தபோது இதுபோல ஏதும் நிகழக்கூடாது என்று கிரிக்கெட் வகுப்பில் சேர்க்கப்பட்டவர் சச்சின்.
விளையாட்டின் அருமை புரியாமல் ரம்யாக்களையும், ராஜாக்களையும்,  வித்யாக்களையும், கீர்த்தனாக்களையும் நாம் வீணடித்துவிடக்கூடாது. விளையாட்டு மட்டுமல்ல  உங்கள் பிள்ளைகளை பன்முகத்திறமை கொண்டவர்களாக வளருங்கள். அவர்களிடம் அது போல ஏதேனும் திறமையிருந்தால் ஊக்குவியுங்கள். வருங்காலத்தில் நமது ஊரிலிருந்தும் ஒரு சச்சின்,  ஒரு இளவழகி, ஒரு விஸ்வநாதன் ஆனந்தைப் பார்க்கலாம்.
அவ்வாறு இருப்பவர்களைக் கண்டறியுங்கள். எங்களிடம் வாருங்கள். மிச்சத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
                                                                   -சீனி

No comments:

Post a Comment