Friday, 11 January 2013

திரும்பிப்பார்க்கிறேன்



     திரும்பிப்பார்க்கிறேன்                                           சீனிவாசன்

                        நமது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை நாம் திரும்பிப்பார்க்கும் போது அத்தனையும் நினைவுக்கு வருவதில்லை. நினைவுக்கு வருவன எல்லாம் மகிழ்ச்சியைத் தருவதில்லை. ஆனால் என் வாழ்க்கையில் நடந்த ஒரு மறக்க முடியாத மகிழச்சியைத் தருகின்ற ஒரு நிகழ்வை நான் பகிர்ந்துக் கொளளப் போகிறேன். அது ஒரு கிரிக்கெட் டோர்னமென்ட்.
                        1990 களின் ஆரம்பத்தில் நமது ஊரில் தொலைக்காட்சி என்பது ஒன்றிரன்டுதான் இருந்தது. அதனால் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி  மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் போனது. தொலைக்காட்சிகள் அதிகரிக்கவே கிரிக்கெட்டின் மீதான ஆர்வமும் வளர்ந்தது. கிரிக்கெட்டுக்கு முன் மூலை ரன் விளையாட்டையும், கொட்டாடி பட்டாடி விளையாட்டையையும் நாம் அதிக அளவில் விளையாடி வந்தோம். பின்னர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தோம். பெரிய மாரியம்மன் கோவில் முன் சோளத்தட்டுக்களை ஸ்டம்ப்பாக வைத்து ஒரு  கார்க் பாலில் விளையாட ஆரம்பித்தோம். அந்த காலத்தில் வழியில் போவோர் வருவோர் மீதெல்லாம் பந்து படும். சீனிவாச செட்டியார் முதல் சின்னதாயம்மாள் வரை பந்தில் அடி வாங்காத ஆட்களே கிடையாது. அதுவும் சின்னதாயம்மாள் வீடு மீது தினமும் பந்து பட்டு ஓடுகள் உடையும். தினமும் அர்ச்சனைதான். பின் நாங்கள் பந்தடித்து ஓடுகளை உடைப்பதும் அவர் அர்ச்சனை செய்வதும் பழகிவிட்டது.

                        அதில் ஒரு மகிழ்ச்சியான விசயம் என்வென்றால் எங்கள் அணியில் அனைத்து வயதினரும் இருந்தனர். மிகவும் வயதானவர் ஆர்மி.திரு.நந்தகோபால் அடுத்து திரு.கண்ணன், திரு.வேல்மணி ஜெகநாதன்  அவர்களும்.  பதின் வயதுகளில் இருந்த நானும் என் நண்பர்களும் இருந்தோம். அனைத்து வயதினரும் சுமார் முப்பது பேர் எங்கள் அணியில் இருப்பர். அப்போதெல்லாம் நமக்குள்ளேயே அணி பிரித்து விளையாடுவோம். அப்போது ஒரு கிரிக்கெட் பேட்டின் விலை ரூ.200. கார்க் பாலின் விலை ரூ.20. அதை வாங்குவதற்குள் படாத பாடாகிவிடும். பத்து பத்தாக ரூபாயாக சேர்த்து ஒரு பேட் வாங்குவதற்கே ஆறு மாதம் ஆகும்.  ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் சேர்த்து பந்து வாங்குவதற்கு இரண்டு நாட்கள் ஆகும். இருபது  வருடங்களில் பல கிரிக்கெட் மட்டைகளையும் பந்துகளையும் நாம் வாங்குமளவிற்கு வளர்ந்திருக்கிறோம். ஆனால். அதை விளையாட பத்து பேர் கூட இன்று இல்லை.

          முதன் முதலாக 1993 வாக்கில்தான் வெளியூர்  (எர்ரப்பட்டி) அணியுடன் விளையாட ஆரம்பித்தோம். பெரிய மாரியம்மன் கோவில் முன் உள்ள இடத்திலிருந்து எங்கள் மைதானம் ஒட்டப்பட்டி ஏரிக்கு பக்கத்தில் மாறியது. அது ஒரு முக்கிய திருப்பு முனையாக இருந்தது. அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். நிறைய நண்பர்களைப் பெற்றோம். நாம் மட்டும் விளையாடிக் கொண்டிருந்த போது பந்தை வீசுவது அதை மட்டையால் அடிப்பது மட்டுமே கிரிக்கெட் என விளையாடிக் கொண்டிருந்தோம். குறிப்பாக லெக் சைடில் அடிப்பதுதான் கிரிக்கெட் என்றே நாம் விளையாடிக் கொண்டிருந்தோம். எர்ரப்பட்டி அணி ஏற்கெனவே சில டோர்னமென்ட்களில் விளையாடி அனுபவம் பெற்றவர்கள் என்பதால் ஓரளவுக்கு விதிமுறைகளை தெரிந்து வைத்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து விளையாடும் போது நமக்கும் விதிமுறைகள் தெரிய ஆரம்பித்தது.

          கார்க் பாலில் விளையாடினால் கூட நம்மிடம் எந்த தற்காப்பு சாதனங்களும் இருக்காது. கார்க் பந்தை நேரடியாக கை, காலில் தடுத்தே விக்கெட் கீப்பிங் செய்து வந்தோம். இந்த நேரத்தில் மறைந்த திரு பாலையா அவர்களை நாம் நினைவு கூற வேண்டும். அவர்தான் எல்லா அடிகளையும் தாங்கிக்கொண்டு அந்தப் பணியை சிறப்பாக செய்தவர். அப்போதெல்லாம் அணிக்கு கேப்டன் என்று யாரும் கிடையாது. அவர்களாகவே பேட்டிங்கில் இறங்குவார்கள்ää அவர்களாகவே பந்து வீசுவார்கள். சில நேரங்களில் அதற்கு சண்டை நடக்கும். நமக்கு விதிமுறைகள் சரியாக தெரியவில்லை என்றாலும் நம்மிடம் திறமை இருந்தது. ஆனாலும் பெரும்பாலான மேட்ச்களில் நாம் அவர்களிடம் தோற்றோம். இதற்கு அணி ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம்.

          நமது அணியில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் எனது வகுப்புத் தோழர் திரு.ரவிக்குமார். அவர்; அன்று ஒரு சேவாக் மாதிரி. பேட்டில் பந்து பட்டால் சிக்சர், பவுண்டரிதான். இல்லை என்றால் முட்டை. அதே போல மிக அதி வேகப் பந்து வீச்சாளர். சில நேரங்களில் அதிக வைடு நோபால்களை வீசுவார். பிற்காலங்களில் ஏமக்குட்டியூர் அணியுடன் நாம் விளையாடிய காலங்களில் தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு பேரை கிளீன் போல்டு செய்தவர். பின் நந்தகுமார்,  கருணாகரன், ஆர்.சிவக்குமார், ரமேஷ், என்.சிவக்குமார் ஆகியோர் நமது அணியில் இருந்த குறிப்பிடத்தகுந்த நபர்கள்.

          நமது அணியில் பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மென்கள் என்று தனித்தனியாக இல்லை. அதே போல ஸ்பின், வேகப்பந்து வீச்சு என்றெல்லாம் தெரியாது. திரு.கண்ணன் அவர்கள் மட்டும்  ஸ்பின் பவுலிங் செய்வார். ஒரு மேட்ச்சில் எர்ரப்பட்டி அணியுடன் நான்கைந்து விக்கெட்டுக்களை எடுத்து வெற்றி தேடித் தந்திருக்கிறார்.  ஒரு மேட்ச்சில் சதிஷ் 5 விக்கெட் எடுத்து வெற்றி தேடித் தந்திருக்கிறார். ஒரு மேட்ச்சில் ரவிக்குமார் தனது ஆல்ரவுண்ட் திறமையினால் வெற்றி தேடித் தந்தார். மொத்தமே எர்ரப்பட்டி அணியுடன் நாம் விளையாடிய 30 க்கும் அதிகமான மேட்ச்களில் நான்கைந்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறோம். அப்போதெல்தாம் நான் அணியில் சேர்க்கப்படாமல் வெறும் பார்வையாளராகவே இருந்திருக்கிறேன். இந்த கட்டுரை எழுதுவதற்கு அது மிகவும் பயனள்ளதாக இருந்தது. பின்னர் ஒட்டப்பட்டி, முக்கல் நாயக்கன்பட்டி, வெங்கட்டம்பட்டி, ஏமக்குட்டியூர் போன்ற பக்கத்து ஊர் அணிகளுடன் விளையாட ஆரம்பித்தோம்.

          அப்போதுதான் எனக்கு அணியில் இடம் கிடைத்தது. அவர்களுடன் நமது வெற்றி சதவீதம் ஓரளவுக்கு இருந்தது. மெல்ல மெல்ல கிரிக்கெட் பற்றிய நமது தொழில்நுட்ப அறிவும் வளர ஆரம்பித்தது. இதில் சிவக்குமார் ராஜவேல் அவர்களை குறிப்பிட வேண்டும். கிரிக்கெட் செய்திகளை படிப்பதற்காகவே தி ஹிண்டு செய்தித் தாளை அவர் வாங்குவார். அவர் மூலமாகவே சில கிரிக்கெட் ஷாட்களின் பெயர்களையும் பல மாநில, தேசிய வீரர்களின் பெயர்கள். அவர்களைப்பற்றிய புள்ளி விவரங்களை அறிய முடிந்தது. அதன் மூலம் அவர்கள் குடும்பத்திலிருந்து சிறந்த அம்பயர்களாக சிவகுமார், ரமேஷ் ஆகியோர் செயல்பட்டனர். நமது ஊரில் வித்தியாசமான ஷாட் அடிப்பதில் வல்லவர் சிவக்குமார் நாகராஜ். லெப்ட் ஹேன்ட் பேட்ஸ்மேனைப் போல கையை வைத்துக் கொண்டு ரைட் ஹேன்ட் பேட்ஸ்மேனாக விளையாடும் போது கவர் திசையில் பந்து பறக்கும். பார்க்கவே வித்தியாசமான ஷாட். ஆனால் அது ரிவர்ஸ் ஸ்வீப் கிடையாது.
          நாளடைவில் கார்க் பந்தில் அடி வாங்க முடியாமல் ரமணி மூர்த்தி,  நான் மற்றும் குமார் ஆகியோர் சேர்ந்து அன்று இருந்த பாரதி இளைஞர் நற்பணி மன்றத்தில் ரூ.1000 கடனாகப் பெற்று கிளவுஸ், பேட் முதலான பொருட்களை வாங்கினோம். ஆனாலும் கார்க் பந்து ஆபத்தானது என்று அறிந்ததால் மெல்ல மெல்ல அதன் தாக்கம் குறைய ஆரம்பித்தது. பின் டென்னிஸ் பந்து பக்கம் திரும்பினோம்.
1996 ல் அறிவொளிக் கோப்பைக்கான போட்டி ஆலிவாயன் கொட்டாயில் நடந்தது. அப்போது 20 வயதைத் தாண்டியவர்கள் சிலர் பணிக்கு சென்று விட்டதால் பதின் வயதுகளில் உள்ளவர்கள் அதிகமாக அணிக்குள் வந்தனர். ஒரு டோர்ணமென்ட் நடக்கும் போது கேப்டன் வேண்டுமே நானே அதை எடுத்துக்கொண்டேன். முதல் மேட்ச் கொல்ல அள்ளி அணியுடன் விளையாடினோம்..தோல்வி. அடுத்து ஏமக்குட்டியூர், முக்கல் நாயக்கன் பட்டி ஆகிய அணிகளுடன் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தோம். குறிப்பாக முக்கல் நாய்க்கன்பட்டியுடனான அறைஇறுதிப் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினோம். அப்போட்டியில் பாபு, செந்தில் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். நான் பந்து வீசிய போது கவர்திசையில் நின்று கொண்டிருந்த ஹரி பிடித்த ஒரு அருமையான கேட்ச் திருப்பு முனையாக இருந்தது. மீண்டும் கொல்ல அள்ளி அணியுடன் இறுதிப் போட்டி. மீண்டும் தோல்வி. அதனால் இரண்டாம் இடம் பிடித்தோம். நமது அணி ரன்னர் அப் வென்ற முதல் டோர்னமென்ட் அது.

          பின்னர் நாமே டோர்ணமென்ட்களை நடத்த ஆரம்பித்தோம். 1998 மே மாதத்தில் 6 அணிகள் கலந்து கொண்ட முதல் நண்பர்கள் கோப்பை மண்டி நாகராஜ் அவர்கள் நிலத்தில் ஆரம்பித்தோம். நன்றாக டோர்ணமென்ட்டை துவக்கினோம். ஆனால் அரையிறுதியில் வெங்கட்டம்பட்டி அணியிடம் தோற்றோம். அதற்கு நான் எடுத்து ஒரு தவறான முடிவு ஒரு காரணம். முந்தைய தினம் மழை பெய்து ஆடுகளம் ஈரமாக இருந்தும் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தோம். 16 ஓவர்கள் கொண்ட மேட்ச்சில் 12 ஓவர்கள் விளையாடி வெறும் 28 ரன்கள் மட்டுமே சேர்த்தோம். நமது தோல்வி உறுதியாகிவிட்ட நிலையில்; அடுத்து நாம் பந்து வீசினோம். முதல் எட்டு ஓவர்களையும் நானும் செந்திலுமே வீசினோம். 8 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை சாய்த்து விட்டோம். ஆனால் இலக்கு குறைவாக இருந்ததால் வெங்கட்டம்பட்டி வெற்றி பெற்றது. நமது போராடும் குணத்திற்கு இந்த மேட்ச் ஒரு சான்றாக அமைந்தது. 8 ஓவர்களில் வெறும் 2 வைடுகள் மட்டுமே வீசப்பட்டது. இந்த டோர்ணமென்டில் தர்மபுரி குப்பாக் கவுண்டர் தெரு முதலிடமும், வெங்கட்டம்பட்டி இரண்டாமிடமும் பெற்றது. பின் தொடாந்து 2001 ம் ஆண்டு வரை 5 நண்பர்கள் கோப்பை டோர்ணமென்ட்களை நடத்தினோம்.கடைசி டோர்ணமென்ட்டில் ஏற்பட்ட சண்டை காரணமாக அதற்குப்பின் டோர்ணமென்ட் நடத்துவது நிறுத்தப்பட்டது.
                        1993 முதல் இன்று வரை பல டோர்ணமென்ட்கள், மேட்ச்சுகள் விளையாடி இருக்கிறோம். இதில் நமது ஊர் கிரிக்கெட்டின் சிறந்த வருடம் என்றால் அது 2000 ம் வருடம். அந்த வருடத்தில் தான் நமது யுனிவர்சல் கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டது. சுமார் 40 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். திரு.சிவகுமார் ராஜவேல் தலைவராகவும், நான் செயலாளராகவும், ஜெயப்பிரகாஷ் பொருளாளராகவும் இருந்தோம். இந்த கிளப்; ஆரம்பிக்கப்பட்டவுடன் பல மாற்றங்கள் ஏற்பட்டது. வளரும் கிரிக்கெட்டர்கள் வளர்ந்த கிரிக்கெட்டர்கள் என்று இரு பிரிவுகளாக உறுப்பினர்கள் பிரிக்கப்பட்டனர். மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட்டது. உள்ளுர் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அதாவது இரு அணிகளாக உறுப்பினர்கள் பிரிக்கப்பட்டு ஏப்ரல் மே மாதம் முழுவதும் கிரிக்கெட் விளையாடப்பட்டது. 25 ரன்கள், 3 விக்கெட்டுகளுக்கு 3 பாயிண்டுகள் என்றும் 10 ரன்னுக்கு 1 பாயின்ட் 1 விக்கெட்டுக்கு ஒரு பாயிண்ட் என்றும் வழங்கப்பட்டு அந்த வாரத்தில் அதிக புள்ளிகள் சேர்த்த வீரருக்கு கிரிக்கெட்டர் ஆப் தி வீக் விருதுகள் வழங்கப்பட்டது.
                                                இந்த உள்ளுர் போட்டிகளில் பல வீரர்களின் திறமை வெளிப்பட்டது. பாபு இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்தார். செந்தில் ஒரு போட்டியில் ஆட்மிழக்காமல் 84 ரன்களை எடுத்தார். இதுவே நமது ஊர் கிரிக்கெட்டில் இதுவரை எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இந்த போட்டிகளின் போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கும். இன்று சுவிட்சர்லாந்தில் இருக்கும் மதன்ராஜ் ஒரு பேட் வைத்திருப்பார். அதற்காகவே அவரை அணியில் சேர்க்க வேண்டும். மேட்ச் முடிந்தவுடன் நானும் ரவியும் ஸடம்பை மைக்காக வைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் பேட்டி கொடுத்துக்கொண்டிருப்போம். இன்று எனக்கு தெரியும் அரை குறை ஆங்கிலத்திற்கு அந்த பேட்டிகளும் ஒரு முக்கிய காரணம். இதில் பரமானந்தமும், விக்ரமும் ஒவ்வொரு சர்வதேச கிரிக்கெட் வீரரையும் காப்பியடித்து அவர் பந்து வீசுவது போல பேட்டிங் செயவது போல செய்து காட்டுவர்.
                       
                        அணிக்கு செந்தில்குமார் கோச்சாக நியமிக்கப்பட்டனர். டோர்ணமென்ட்டுக்கு அணி தேர்வு செய்யும் போது உள்ளுர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். போட்டிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் கிரிக்கெட் விளையாடாமல் எங்களை ஊக்கப்படுத்தியதில் முக்கியமானவர் ஈஸ்வர்ராஜா. கிரிக்கெட் பற்றிய விதிமுறைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.                            
                       
                        2000 ம் வருடம் திருச்சி தேசியக் கல்லூரியில் எம்.எஸ்.சி படித்துக்கொண்டிருந்தேன்.  படிப்பு விடுமுறைக்காக நான் ஊருக்கு வந்திருந்தேன். மிட்டாதின்ன அள்ளியில் 16 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் டோர்ணமென்ட் நடப்பதாக கேள்விப்பட்டு அணி தேர்வு செய்யப்பட்டு ஒரு சைக்கிளுக்கு 3 பேர் வீதம் 15 பேர் கிளம்பினோம். கார்த்தி (டக்கு) க்கு 10 வயது. வீட்டில் அழுது அடம் பிடித்து அவங்கம்மா ரெக்கமன்டேசனில் ஒரு சைக்கிளில் ஏறிக்கொண்டான். காலை 10 மணிக்கு முதல் மேட்ச் நமது ஊருக்கும் மிட்டாரெட்டி அள்ளிக்கும் நடந்தது. மிட்டாரெட்டி அள்ளி முதலில் பேட் செய்தது. முதல் ஓவரை நான் வீசினேன். முதல் பந்தில் ரன் எதுவும் இல்லை. இரண்டாவது பந்தில் விக்கெட் கீப்பர் பாபு என்னிடம் சொன்ன ஒரு குறிப்பை பயன்படுத்தி நான் பந்தை சற்று மெதுவாக வீச புத்திசாலித்தனமாக பாபு ஸ்டம்பிங் செய்ய முதல் விக்கெட் வீழ்ந்தது. உடனே நடுவர் அந்த பந்தை நோ பாலாக அறிவித்தார். நடுவரிடம் விவாதம் செய்து நோ பாலாக இருந்தாலும் ஸ்டம்பிங் செய்தால் விக்கெட் உண்டு என்று கூறிய பின் விக்கெட் தரப்பட்டது. அதே ஓவரில் பந்து வீசும் போது ரன்னர் வெளியே நிற்க அவரை பந்து வீசிக்கொண்டிருந்த நான் ஸ்டம்பில் அடித்து வெளியேற்ற முதல் ஓவரிலேயே எதிரணி தடுமாறியது. பின்பு எதிரணி பேட் செய்ய ஒரு சிக்சருக்கு அடிக்கப்பட்ட பந்தை கிருஷ்ணமூர்த்தி பாய்ந்து பிடிக்கும் போது காலில் ரத்தம் வழிந்த போதும் அருமையாக கேட்ச் செய்தார். ஆனால் நடுவர் அதை சிக்சராக அறிவித்தார். நடுவரின் தீர்ப்புகள் நமக்கு எதிராக அமைந்தது.
                        ஆனால் நமது அணி நேர்த்தியாக விளையாடியதைப் பார்த்ததும் ஆடியன்சாக இருந்தவர்கள் நமது அணியை ஆதரித்து ஆரவாரம் செய்தனர். எதிரணி 9.2 ஓவர்களில் 50 ரன்களை எடுத்தது. பாபு சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த டோர்ணமென்டின் முதல் மேட்ச்சிலிருந்து ஒரு விசயத்தை கற்றுக் கொண்டோம். எதிரணியை வெல்ல 100 சதவீதமும் நடுவர்களின் தீர்ப்புகளுக்கு எதிராக 100 சதவீதமும் போரட வேண்டும் என 200 சதவீத ஊக்கத்துடன் விளையாடினோம். ஆப் ஸ்டம்புக்கு வெளியில் சென்றாலே வைடு என நடுவர் அறிவிப்பார். உடனே நம் பந்து வீச்சாளர்களுக்கு நான் ஒரு சிறு அறிவுரை கொடுத்தேன். அதாவது அனைத்து பந்துகளையும் பேட்ஸ்மென்னின் உடலில் அல்லது மட்டையில் படும்படி ஸ்டம்ப் டு ஸ்டம்ப் பந்து வீசச் செய்து எதிரணியை வென்றோம். நடுவர்களை தோற்கடித்தோம்.
          நமது அணி 8.1 ஓவரிலேயே இலக்கை எட்டியது. ரவிக்குமார் ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து (ஷேவாக்?) அடுத்த பந்தில் அவுட்டானார். பின்னர் வந்த செந்தில் பாபு ஜோடி சிறப்பாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தந்தது.  நாக் அவுட் முறையில் நடந்த இந்த டோர்ணமென்டில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டது. நாம் விளையாடிய இறுதிப்போட்டி தவிர 5 மேட்ச்களில் வென்றோம். இரண்டாவது நாளில் காலை பதினோரு மணிக்கு ஒரு மேட்ச்சும் மதியம் 3 மணிக்கு ஒரு மேட்ச்சும் விளையாடும்படி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. அதனால் இரண்டு சிக்கல்கள்; உருவானது. இரண்டாவது நாளன்று நமது அணியில் இருந்த முன்னணி வீரர்களான 2 கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு, மற்றும் மதிய உணவு. மதிய உணவிற்கு புளி சாதம் தயார் செய்யப்பட்டது. தேர்வு? ஒரு விசயம் தீர்மாணிக்கப்பட்டது. செந்திலுக்கு காலையில்  தேர்வு, ரவிக்கு மாலையில் தேர்வு. ரவி மேட்ச் முடித்து விட்டு தேர்வெழுதுவது என்றும், செந்தில் தேர்வு முடித்துவிட்டு மேடச் விளையாடுவதென தீர்மாணிக்கப்பட்டது.
          அவ்வாறே தம்மணம்பட்டி,  ஏமக்குட்டியூர் அணிகளுடன் விளையாடி இரு மேட்ச்களையும் வென்றோம். மதிய உணவை ரமேசும் தாமோதரனும் தயார் செய்தனர். ஆனால் காலையில் நடக்கும் மேட்ச்சைக் காணவேண்டும் என்ற ஆவலில் 5 கிலோமீட்டர் சைக்கிளில் வந்து மேட்ச் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று உணவைக் கொண்டு வந்தனர். இந்த டோர்ணமென்டின் லீக் ஆட்டங்களில் அனைவரும் மிகச் சிறப்பாக விளையாடினர். சச்சினை மட்டுமே நம்பி இருந்த இந்திய அணியைப் போல அல்லாமல் அனைவரும் சிறப்பாக விளையாடினர். பரமானந்தத்தின் கிளாசிக்கல் ஷாட்ஸ், நேர்த்தியான பந்துவீச்சு, சக்திவேலின் ஆப் ட்ரைவ் ஷாட்ஸ், ரவிக்குமாரின் அதிரடி, பாபு மற்றும் செந்திலின் ஆல்ரவுன்ட் திறமை என அத்தனை அம்சங்களும் நமது அணியின் வெற்றிக்கு உதவின.
          இந்த டோர்ணமென்டில் கலக்கிய இளம் வீரர் செல்வராஜ். மாதேமங்கலத்திற்கெதிரான போட்டியில் தான் வீசிய 12 பந்துகளில் 8 பந்துகள் கேட்ச்சுகளாக மாற துரதிருஷ்ட வசமாக இரண்டு கேட்ச்களை மட்டும் நமது பீல்டர்கள் பிடித்தனர்.. இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விசயம் அணியில் விளையாடுவதற்கு பதினைந்து பேருடன் எங்களை ஊக்கப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் எங்களுடன் நம் ஊரிலிருந்து வந்தவர் பலர். கொரியர் குமார், ராமலிங்கம் புட்டன், கண்ணன் சிவராஜ், கோபால் பங்காரு ஆகியோரின் ஊக்கம் நமது அணி வெற்றி பெற தேவையான ஊக்கத்தை அளித்தது. இவர்களின் ஆரவாரமும் கைத்தட்டலும் எங்களுக்கு டானிக்காக இருந்தது.

          கடைசியில் இறுதிப் போட்டி அந்த டோர்ணமென்ட்டை நடத்திய மிட்டாதின்ன அள்ளி அணியுடன் நடந்தது. மிட்டாதின்னஅள்ளியின் ஜுனியர் அணியுடன் நாம் ஏற்கெனவே ஒரு போட்டியில் வென்றிருந்தோம். அதனால் நம்மை தோற்கடிக்க நடுவர்களின் துணையை நாடினர் போட்டி அமைப்பினர். நேரம் மாலை 5 மணி லேசாக இருட்டத் தொடங்கியிருந்தது. முதலில் அவர்கள் பேட்டிங் செய்தார்கள். 12 ஓவர்களில் 73 ரன்கள் குவித்திருந்ததாக நினைவு. நாம் பாட்டிங் செய்த பொழுது அம்பயர்களின் அணைத்து முடிவுகளும் நமக்கு எதிராகவே இருந்தது. ஏனென்றால் கிராமங்களில் நடக்கும் கிரிக்கெட் டோர்ணமென்ட்களில் டோர்ணமென்டை நடத்தும் கிராமம் நேரடியாக பைனலுக்கு வரும். அந்த அணி அம்பயர்கள் ஆதரவுடன் ஜெயிக்கும். அதே திட்டம்தான் மிட்டாதின்ன அள்ளியிலும் செயல்படுத்தப்பட இருந்தது.

          ஆனால் எதிரணியை எதிர்த்து நன்றாக விளையாட முடிந்த நம்மால் அம்ப்பயர்களை எதிர்த்து விளையாட முடியாதால் போட்டியிலிருந்து வெளியேறுவதாக கூறி பரிசை தவிர்த்தோம். ஆனால் அங்கிருந்த ஊர்ப்பெரியவர்களின் வேண்டுகோளை ஏற்று இரண்டாம் பரிசைப் பெற்றோம். இறுதியாட்டத்தில் தோற்றாலும் நமது ஆட்டத்தால் அங்கிருந்த மக்களின் மனங்களை வென்றே ஊர் திரும்பினோம். டீம் ஸ்பிரிட் இருந்தால் எதையும் வெல்லலாம் என்பதையும், பல நெகடிவ்வான விசங்கள் இருந்தாலும் அதை பாசிட்டிவ்வாக மாற்ற முடியும் என்பதையும்; இந்த போட்டித் தொடர் உணர்த்தியது.

                        இந்த தொடரில் 6 போட்டிகளில் 18 ஓவர்கள் பந்து வீசி 64 ரன்கள் கொடுத்து 14 விக்கெட்டுகளை நான் வீழ்த்தியிருந்தேன். ஆனால் டோர்ணமென்ட் முடிந்து வந்த பல்கலைக்கழகத் தேர்வுகளில் இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தது வேறு கதை.

           எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வேண்டுமே. நண்பர்கள் எல்லோரும் நகரத்தை நோக்கி தங்கள் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் சென்றுவிட்டனர். எல்லாம் முடிந்துவிட்டது. அந்த நாட்கள் மீண்டும் வருமா? திரு.நந்த கோபால் அவர்கள் 40 வயதிலும் எங்களுடன் விளையாடியதைப் போல நானும் எங்கள் இளைய வயதினருடன் விளையாட முடியுமா? காத்திருக்கிறேன்..
                                                          .ஆட்டம் தொடரும்.


No comments:

Post a Comment