வணக்கம்,
நமது கிராமத்தைப் பற்றியும் அதன் வரலாறு கலாச்சாரம்
முக்கியமான நிகழ்வுகள்ஆகியவற்றைப் பதிவு செய்ய ஒரு இதழ் வெளியிட நினைத்தோம். சரி!
அந்த இதழுக்கு என்ன பெயர் சூட்டுவது என முடிவு செய்து ஊர்க்குருவி என்று பெயரிட
தீர்மானிக்கப்பட்டது. ஊரிலிருந்து ஒரு செய்தியை கொண்டு வருகிறது என்பதை
உணர்த்தவும் பண்டைய காலத்தில் செய்திகளை கொண்டுவர பறவைகள் (புறா)
பயன்படுத்தப்பட்டது என்பதன் அடிப்படையிலும் நவீன காலத்தில் டுவிட்டர் மூலம்
செய்திகள் பரிமாறப்படுகிறது என்பதன் அடிப்படையிலும் ஊர்க்குருவி என பெயரிடப்பட்டது
நாம் எத்தனையோ மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறோம்.
மாற்றங்களுக்குப்பின் சிலவற்றை பெற்றிருக்கிறோம், சிலவற்றை
இழந்திருக்கிறோம். பெற்றதிற்காக நாம் சந்தோசப்படுகிறோமோ இல்லையோ? இழந்தவைகளுக்கான
ஏக்கம் நம் மனதில் இருந்து கொண்டேதான் இருக்கும். எத்தனையோ
நாடுகளுக்கு சென்று வந்தாலும் எங்கும் கிடைக்காத சந்தோசம் நமது ஊருக்கு வந்தவுடன்
வருகிறதல்லவா?
நாம் எப்படி இருக்கிறோம் என்பதும் எப்படி இருந்தோம் என்பதும்
நமக்கு தெரிந்திருக்கலாம். நமது தந்தையார் தாயார் நம் வயதில் எப்படி இருந்தனர் என
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். தாத்தாக்களுக்கு கிடைத்ததில் பல விஷயங்கள்
அப்பாக்களுக்கு கிடைக்கவில்லை அப்பாக்களுக்கு கிடைத்த பல விஷயங்கள் நமக்கு
கிடைக்கவில்லை. நமது அடுத்த தலைமுறைக்கு என்ன கிடைக்கும்?
மார்கழி மாதம் 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு
மேலாடையின்றி விநாயகர் கோவிலில் பஜனை பாடிய பின் காலையில் கிடைக்கும் சுண்டலை
ரசித்து சாப்பிட்டிருக்கிறீர்களா?, தற்போது
ராமர் கோவில் இருக்கும் இடத்திற்கு வண்டி மேடு (பண்டி மிட்ட) என்று பெயர்.
ஸ்ரீராமர் நவமிக்கு இரவு முழுதும் அந்த இடத்தை சுத்தம் செய்து சோளத்தட்டும் தென்னங்கீற்றும்
கொண்டு பந்தலிட்டு காலையில் சீதா ராமர் கல்யாணம் நடந்தபின் கிடைக்கும் பிரசாதத்தை
சாப்பிட்டிருக்கிறீர்களா?
தோப்பில் இருந்த ஒற்றை மாட்டு செக்கில் அமர்ந்து சவாரி செய்திருக்கிறீர்களா? செக்கு ஆடி முடித்தபின் தரும் எள் புண்ணாக்கை சாப்பிட்டிருக்கிறீர்களா?
இரவில் களத்து மேட்டில் காவல் இருந்து கொண்டைக்கடலை சுட்டு
சாப்பிட்டுக்கொண்டே குளிர் காய்ந்திருக்கிறீர்களா? யுகாதி பண்டிகைக்கு
காலையிலிருந்தே நெய்ப்பந்தம் தயார் செய்து இரவில் அதை எடுத்துக்கொண்டு மாதேஸ்வரன்
சிலைக்கு பூசை செய்து பின்னர் கடலை பருப்பு பங்கிடுவதையும் அதற்காக ஏற்படும் சிறு
சிறு சண்டைகளையும் ரசித்திருக்கிறீர்களா? கோடைக்
காலத்தில் நாளைக்கு மூன்று முறை கிணற்றில் நீச்சலடித்து வீட்டில திட்டு வாங்கியிருக்கிறீர்களா? ஏரியில் மீன் பிடிக்க
சென்றிருக்கிறீர்களா? ஏரிக்கரை பனைமரத்தில் ஏறி பனங்காய்
பறித்து நுங்கு வெட்டி சாப்பிட்டிருக்கிறீர்களா?
இதில் பலவற்றிற்கு இன்றைய இளம் தலைமுறையினரிடம் இல்லை என்றே
பதில் வரும். இன்றைய இளம் தலைமுறைக்கு இன்டர்நெட் எனப்படும் இணையம் ஒரு
வரப்பிரசாதம். இதன் மூலம் எத்தனையே தகவல்களையும் செய்திகளையும் பெறவும் அறியவும்
முடியும். ஆனால் நம்மைப் பற்றியும் நமது முன்னோர்கள் பற்றியும் அறிய முடியுமா? இணையத்தில் நாம் பல கதைகளை படிக்க முடியும். ஆனால்
பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு கதை கேட்டுக்கொண்டே தூங்கும் சுகம் எங்காவது
கிடைக்குமா? அது போன்ற ஒரு சுகமான நினைவுகளின் பதிவுகளே
இந்த ஊர்க்குருவி…எவ்வளவோ விசயங்களை நாம்
இன்று பெற்றிருந்தாலும் இழந்தவற்றையும் தவறவிட்டதையும்
நினைக்கையில் ஒரு ஏக்கம் நம் மனதில் ஏற்படாமல் இருக்காது. அந்த ஏக்கத்தை ஓரளவாவது
இந்த ஊர்க்குருவி போக்கும் என நம்புகிறோம்.
இதில் உள்ள செய்திகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவை பல்வேறு
நபர்களிடம் சேகரித்து ஓரளவுக்கு உண்மையானது என்பதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதழில்
வரும் படைப்புகள் எந்த ஒரு நபரையோ, குடும்பத்தையோ குறிப்பிடுபவை அல்ல. முடிந்த வரை
தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தகவல்கள் விடுபட்டிருந்தாலோ, தவறாக இருந்தாலோ
தெரியப்படுத்தவும்.
தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்..தயவு செய்து அந்த தவறுகளை
தெரியப்படுத்தவும். அடுத்த இதழை செம்மையாக்க இது மிகவும் பயன்படும். இந்த இதழ் வெளியிட பல்வேறு வகைகளில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி
No comments:
Post a Comment