நமது கடமை
தொன்னூறுகளில் நூறு பேர் வரை படித்த நமது ஊர் பள்ளியில் இன்று பத்து பேர் வரை மட்டுமே படிக்கின்றனர். இன்று ஆங்கில வழி கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே அதற்கு காரணம். கல்வியின் முக்கியத்துவம் அறிந்த இன்றைய பெற்றோர் எப்பாடுபட்டேனும் தங்கள் பிள்ளைகளை நல்ல பள்ளியில் படிக்கவைத்து அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். பெற்றோருடன் பிள்ளைகளும் காலையிலேயே தோட்டத்திற்கு சென்று எருமை மாடு மேய்த்து சாணி அள்ளிய காலம் மலையேறிவிட்டது.
இன்று யூனிபார்ம், டை, ஷூ போட்டுக்கொண்டு புத்தகப்பை தூக்கிகொண்டு ஸ்கூல் வேன் பிடித்து பள்ளி சென்று வருவதற்கே பிள்ளைகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. மீதம் உள்ள நேரத்தில் ஹோம்வொர்க், டிவி, விடியோ கேம் என்று நேரம் போகிறது அவர்களுக்கு. பிள்ளைகளின் படிப்பிற்காக அன்றைய பெற்றோரை விட இன்றைய பெற்றோர் படும் கஷ்டம் நாம் அனைவரும் அறிந்ததே. நல்ல பள்ளியில் இடம் வாங்க, தினமும் பள்ளி, டியுசன் கொண்டு செல்ல, பீஸ் என்று எத்தனை பிரச்சனைகள் பெற்றோர்களுக்கு.
இவை அனைத்தையும் செய்யும் பெற்றோர் இன்று பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது வீட்டிற்கு வரும் உறவினர்களிடம் ரைம்ஸ் சொல்லவேண்டும், ஆங்கிலத்தில் பேச வேண்டும், மம்மி டாடி என்றழைக்கவேண்டும், முதல் மதிப்பெண் வாங்க வேண்டும், பெரிய கல்லூரியில் டாக்டர் சீட்டோ, இன்ஜினியரிங் சீட்டோ பெறவேண்டும், பெரிய கம்பனியில் பிளேஸ்மென்ட் கிடைக்கவேண்டும், பெங்களூரிலோ சென்னையிலோ ஒரு வீடு வாங்கவேண்டும் என்பதைதான். கேட்பதை எல்லாம் வாங்கி கொடுக்கிறேன், பெரிய பள்ளியில் படிக்க வைக்கிறேன், டியுசன் அனுப்புகிறேன், செல்போன், லேப்டாப், பைக் என எல்லாம் வாங்கித்தருகிறேன் ஆனாலும் சரியாக படிப்பதில்லை என தங்கள் பிள்ளைகளை குற்றம் சாட்டுகிறார்கள் பல பெற்றோர்கள். பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும், என்ன வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை அவர்களின் விருப்பம், திறமை ஆகியவை நிர்ணயிப்பதில்லை. மாறாக பெற்றோர்களின் வசதி, கவுரவம், சூழ்நிலை ஆகியவே நிர்ணயிக்கிறது.
பெற்றோர்களின் ஆசைகளையும், விருப்பங்களையும், அவர்கள் சாதிக்க தவறியதையும் பிள்ளைகள் செய்ய வேண்டும் என நினைக்கும் பெற்றோர் பிள்ளைகளின் விருப்பத்தை அறியாதது ஆரோக்கியம் அல்ல. பிள்ளைகளின் கல்வி, வேலை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் உறவினர்களை பற்றியோ, உறவினர்களுடன் எப்படி பழகவேண்டும் என்பாதையோ, தங்களின் வேலைகளை தாங்களே செய்யவோ கற்றுத்தருகிறீர்களா. அல்லது அவர்களின் தினசரி நடவடிக்கைகளையோ, நண்பர்களையோ கண்காணிக்கிறீர்களா? பிள்ளைகளின் விருப்ப பாடம், அவர்களின் ஆசிரியர்கள், பிடித்த விளையாட்டு என்ன என்பதை கேட்கிறீர்களா. குறைந்தபட்சம் அவர்களை விளையாட அனுமதிக்கிறீர்களா?
நமது ஊரில் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்களும் உள்ளனர். ஆனால் இது இவர்கள் பெற்றோருக்குகூட தெரியாது என்பதுதான் வேதனை. பெற்றோர்களாகிய நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால்
· பிள்ளைகள் கேட்பதையெல்லாம் வாங்கித்தராதீர்கள். அவார்களுக்கு தேவையானதை வாங்கிதாருங்கள்.
· அதிக மதிப்பெண்னை விட நல்ல பண்புகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள்.
· உறவின் முக்கியத்துவத்தையும், பெரியவர்களின் பெருமையையும் சொல்லித்தாருங்கள்.
· உங்களின் விருப்பத்தை அவர்களிடம் திணிக்காதீர்கள், அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளியுங்கள்.
· விளையாட்டு, ஓவியம், இலக்கியம், நடனம் போன்ற மற்ற விசயங்களையும் கற்றுக்கொடுங்கள்.
· பிள்ளைகளுக்கு முன் சண்டை போடாதீர்கள்.
· உங்கள் வீட்டு பொருளாதார நிலைமையை அவர்களுக்கு விளக்கி சொல்லுங்கள்.
· வீட்டு வேலை செய்ய அனுமதியுங்கள்.
· மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள்.
· பிள்ளைகள் நீங்கள் சொல்வதை செய்வதில்லை. நீங்கள் செய்வதை செய்கிறார்கள். ஆதலால் உங்கள் நடை உடை பாவனை ஆகியவைதான் அவர்களுக்கு முன்மாதிரி என்பதை உணருங்கள்.
· பிள்ளைகள் படிப்பதற்கு நல்ல சூழ்நிலையை அமைத்துக்கொடுங்கள்.
· உங்கள் பிள்ளைகள் உங்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதுபோல் நீங்கள் உங்கள் பெற்றோரிடம் நடந்து கொள்ளுங்கள்.
· பிள்ளைகளை பீடி, சிகரெட், புகையிலை வாங்கிவர சொல்லாதீர்கள்.
· உங்கள் அனுபவத்தை சொல்லித்தரும் நீங்கள் அவர்கள் ஆலோசனையையும் கேளுங்கள்.
-தாமோதரன்
No comments:
Post a Comment