Saturday, 8 February 2014

oor kuruvi 2014



வணக்கம்,
ஊர்க்குருவியின் இந்த இரண்டாவது பாட்டில் உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி.  நமது கிராமத்தைப் பற்றியும், நமது மக்களைப்பற்றியும் அவர்களின் அனுபவங்களையும் தாங்கி ஒரு இதழ் வெளியிடப்பட்டது.  பல்வேறு கலவையான அதிர்வுகளை ஏற்படுத்தியது.  ஏறத்தாழ ஒரு வருடம் திட்டமிட்டு இரண்டு மாதம் உழைத்து இதழின் அட்டை வடிவமைப்பதாகட்டும், ugl க்கான சின்னம்  வடிவமைப்பதாகட்டும் அதிக நேர்த்தியுடனும், நமது கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது.  Ugl ன் சின்னத்தில் உள்ள ஏழு பேர் நடிமி இல்லு, பெத்த இல்லு, குள்ளப்ப செட்டி, கம்பால் செட்டி, காணிக இல்லு, எர்ரன்ன, மற்றவர்கள் நமது உறவினர்களை குறிப்பதாகவும், செக்கு நமது குலத்தொழிலை குறிப்பதாகவும்   வடிவமைக்கப்பட்டது.
           எழுத்துப்பிழை திருத்தி கருத்துப்பிழை ஏற்படாமலும், முடிந்தவரையில் விவரங்களின் நம்பகத்தன்மை சரிபார்த்தே வெளியிடப்பட்டது.  ஆனாலும் தவிர்க்க முடியாத சில தவறுகள் ஏற்ப்பட்டது.  சில விவரங்கள் விடுபட்டது.  கடந்த இதழில் ஏற்ப்பட்ட தவறுகளுக்கும், விடுபட்ட விவரங்களுக்கும் எந்த வித உள்நோக்கமும் கிடையாது.  அனைத்து விவரங்களும் ஊரில் உள்ள முதியோர்களிடம் கேட்டு பதிவு செய்யப்பட்டது.  வாய் வழி ஆதாரங்களைத் தவிர வேறு ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. சென்ற இதழ் பல்வேறு பாராட்டுகளையும், எதிர்மறை விமர்சனங்களையும் எற்படுத்தியது. அதில் குறிப்பாக “மற்றவர்கள்” என்று குறிப்பிடப்பட்ட பெயர்கள் தங்களை வேறுபடுத்தியதுபோல் உணர்ந்தனர்.  ஆனால் அவர்களை மேலே குறிப்பிட்ட ஆறு  வகையறாவிலும்
குறிக்க முடியாது என்பதாலேயே மற்றவர்கள் என தலைப்பிடப்பட்டது.  அனைவரும் நமது ஊரினரே.  இதில் எந்த வித சந்தேகமும், மாற்றுக்கருத்தும் இல்லை.  மேலும் நமது ஊரைப்பற்றிய பாடல் மற்ற ஊர்களை குறைத்து மதிப்பிடுவதாக அல்ல.  நமது ஊரைப்பற்றிய பழக்கத்தில் இருந்த பாடலைப் பற்றிய  ஒரு பதிவு அவ்வளவே. மேலும் அட்டை வடிவமைப்பில் பெரிய மாரியம்மன் கோவில் இடம் பெறவில்லை என சிலர் வருந்தினர். பெரிய மாரியம்மன் கோவில் முன்பு நிறைய ஜல்லி, மணல் கொட்டியிருதாதால் புகைப்படம் சரியாக எடுக்க முடியவில்லை. அதற்காக வருந்துகிறோம். பாராட்டுகளை விட விமர்சனங்களே இதழின் வளர்ச்சிக்கு உதவும். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.   இந்த இதழ் வெளியிடுவதன் நோக்கம் நமது ஊரைப்பற்றிய பற்றிய ஒரு பதிவே தவிர எந்த ஜாதியையும் முன்னிலை படுத்தவோ,  குறைத்து சொல்லவோ அல்ல.  இது நமது ஊரைப்பற்றியும், நமது முன்னோர்களைப்பற்றியும் இன்றைய தலைமுறைக்கு கொண்டுசெல்லவே வெளியிடப்படுகிறது.   
முதல் இதழை யாரை வைத்து வெளியிடுவது என யோசிக்கும் போது எங்கள் நினைவில் வந்தவர்கள் திரு .நந்தகோபால் Army அவர்களும், திரு.ரவிச்சந்திரன், நீதிபதி அவர்களும். நமது ஊரை சேர்ந்த ஒருவர் வெளியிட, நமது ஊரைப் பற்றி நன்கு தெரிந்த வெளியூரைச் சேர்ந்த  நமது உறவினர் ஒருவர் இதழைப் பெற்றால் நன்றாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டு நோட்டீஸ் அடிக்கப்பட்டது.  ஆனால் புத்தகம் முழுவடிவை பெறவில்லை.  இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் இரவு பகல் முழுவதும் இதழை தட்டச்சு செய்து பிழைத்திருத்தி நாமே அதை முழு வடிவில் தயாரித்து திரு. ஞானசேகர் அவர்களிடம் போகிப்பண்டிகை அன்றுதான் தந்தோம்.  அவர் பொங்கல் அன்றே முன்னூறு பிரதிகளையும் அச்சிட்டு நம்மை ஆறுதல்படுத்தினார்.  இதழுக்கான முழு செலவையும் மனம் கோணாமல் ஏற்று அட்டை பக்கத்தை வண்ணத்தில் அடிக்கசெய்து நமக்கு பேருதவி செய்தவர் திரு. கிருஷ்ணமூர்த்தி (Hi Tech Systems) அவர்கள்.
          இந்நிலையில் புதிதாக ஒரு பிரச்சினை வந்தது.  இளவரசன்-திவ்யா காதல் பிரசனையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எந்த ஊரிலும் பொது நிகழச்சிகள் நடத்த முடியாத நிலை.  காவல் நிலையம், S P அலுவலகம் என்று என்று அனைத்து அலுவலகங்களையும் சென்றும் விழா நடத்த அனுமதி கிடைக்காததால் கடைசியில் பொங்கல் நிகழ்சிகளை ரத்து செய்வதென தீர்மானிக்கப்பட்டது.  ஆனால் எப்படியாவது புத்தகம் வெளியிட தீர்மானிக்கப்பட்டது.
          இதற்கிடையில் திரு. தாமோதரன் அவர்களின் முகநூல் நண்பர் காரிமங்கலத்தை சேர்ந்த மேஜர்(ஒய்வு) டாக்டர். வினோத் சரவணன் அவர்கள் நமது இதழ் வெளியீட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.  அவருடன் அதே ஊரைச்சேர்ந்த திரு. லட்சுமப்ப செட்டியார், சமூக ஆர்வலர் மற்றும் திரு. கார்த்திகேயன், பணி ஏற்பாட்டு அலுவலர் (அதியமான் கல்லூரி) அவர்கள் திடீரென நமது இதழ் வெளியீட்டு விழாவிற்கு வருவதற்க்கு இசைந்து நம்மை ஆச்சர்யப்படவைத்தனர்.  இதனால் பொங்கல் அன்று இராமர் கோவில் முன்பு ஊர்செட்டியார் திரு. சுந்தரம் அவர்கள்  வெளியிட திரு. ரவிச்சந்திரன் மற்றும் திரு. லட்சுமப்ப செட்டியார் அவர்கள்  புத்தகத்தை பெற்றுக்கொண்டார்கள்.
          திரு. லட்சுமப்ப செட்டியார் அவர்கள் காரிமங்கலத்தில் முதல் பட்டதாரி என்பதும் அவர் நமது நிகழ்ச்சியில் பங்கேற்றதும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.  புத்தக வெளியீட்டு விழாவுடன் சக்திவேல் R O அவர்களின் மினரல் வாட்டர் அறிமுக விழாவும் சேர்ந்து நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.  அடுத்த நாள் மந்தையில் அனைவருக்கும் நமது இதழ் வழங்கப்பட்டது.  நமது ஊரில் உள்ளவர்களுக்கும், ஊரைவிட்டு வெளியில் தங்கியுள்ளவர்களுக்கும் நம் உறவினர் உள்ள ஊர்களுக்கும் இதழ் அளிக்கப்பட்டது.
          வித்தியாசமான முயற்சியாக இருந்த நமது இதழுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்த போதிலும் குறைகளை சுட்டிக்காட்டுவதல்லாமல் மற்ற எதிர்மறையான கருத்துகளையும் தவிர்க்க முடியவில்லை.  இந்த இதழ் வெளியிட நேரிடையாகவோ, மறைமுகமாகவோ உதவிய அனைவருக்கும் நன்றி.  கடந்த இதழுக்கு பல்வேறு நம்மிடம் பகிர்ந்துகொண்டதோடு நமது ஊரைப்பற்றிய சுமார் 50 வருட நிகழ்வுகளை தொகுத்து வைத்து பொக்கிஷமாக நமக்கு தந்துவிட்டு மறைந்த திரு. ஜெகதீசன் அவர்களுக்கு கோடி நன்றி.  கடந்த ஒரு வருடமாக நம்மோடு தொடர்புகொண்டு நமது அனைத்து முயற்ச்சிகளுக்கும் தனது ஆதரவையும்,  நம் குலத்தவரின் முன்னேற்றத்திற்காண காரியங்களில் ஈடுபட்டு வரும் திரு. வினோத் சரவணன் அவர்களுக்கு நன்றி.
          ஊர்க்குருவி இதழ் ஒரே பதிப்பாக வந்து நிற்கப்போவதில்லை.  ஒவ்வொரு வருடமும் இந்த ஊர்க்குருவியின் பாடல் உங்கள் காதுகளை மகிழ்விக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.  உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்தால் ஊர்க்குருவி உயர உயர பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதழுக்கான ஆலோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன.  உங்கள் படைப்புகளையும், இந்த ஊரைப்பற்றிய செய்திகளையும் நம்மிடம் பகிர்துக்கொண்டால் இதழ் மேலும் சிறக்கும்.


சொல்லுக யார்க்கும் எளிய அறியவாம்
சொல்லிய வன்னம் செயல்.
-பதிப்புக்குழு    

No comments:

Post a Comment